தமிழ்நாடு மாணவர்கள் எல்லாவற்றையும் போல விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இலக்கை நோக்கி பயணிக்க தேசிய விளையாட்டு தினத்தில் உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தேசிய விளையாட்டு தினமான இன்று விளையாட்டு வீரர் – வீராங்கனையர் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் பேச – எழுத கற்றுக் கொள்ளும் முன்பே விளையாடத் தொடங்குகிறோம். அதனை முறைப்படுத்தி வளர்த்தெடுத்தால் சாதிக்கும் வீரர்களை உருவாக்க முடியும். மேலும், உடலையும் உள்ளத்தையும் சீராக்க தொடர்ந்து விளையாடுவது எல்லோருக்கும் அவசியம்.
இதனை உணர்ந்தே விளையாட்டுத் துறைக்கு தனி அமைச்சகத்தை நம் முத்தமிழ் அறிஞர் அவர்கள் தொடங்கினார்கள். பன்னாட்டு போட்டிகள் – தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை – சர்வதேச விளையாட்டு நகரம் என இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி நம் முதலமைச்சர், அவற்றை வளர்த்தெடுத்து வருகிறார்கள்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத் தலைநகராக்க நாள்தோறும் உழைத்து வருகிறோம்.
விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இலக்கை நோக்கி பயணிக்கதேசிய விளையாட்டு தினத்தில் உறுதியேற்போம்” என்று கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாத நிலைக்கு கொரோனா பெருந்தொற்று ஒரு காரணாமாக கருதப்பட்ட நிலையில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது விளையாட்டு.