தக்காளி விலை உயர்வும்., தறி கெட்ட அரசியலும்.!

0
158
எச்.ராஜா

தலையங்கம்..

வரலாறு காணாத என்கிற வார்த்தையை அரசியல்வாதிகள் பயன்படுத்தும் போது அதை தேடி பார்க்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போதுதான் உண்மையிலேயே வரலாறு காணாத என்கிற வார்த்தைக்கு முழு அர்த்தமும் தெரிந்துள்ளது. அதுவும் தக்காளி விலை உயர்வால். தமிழகத்தில் ஒவ்வொரு பருவத்திற்கும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் உற்பத்தி சுழற்சி முறையில் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சுழற்சியில் எங்கும் இதுவரை இடைவெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது தக்காளி உற்பத்தியில் அந்த இடைவெளி மிக நீளமானதாக இருப்பதே உணர முடிகிறது.
ரூபாய் ஐந்து முதல் 15 ரூபாய் வரை விற்று வந்த தக்காளி இப்போது அரசியல்வாதிகள் சொல்வது போல வரலாறு காணாத விளையாக ரூபாய் 150 தொடங்கி 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு தற்காலிகமானதா என்றால் இல்லை. ஆனால் தற்காலிகமானது என்று அரசும் அரசியல்வாதிகளும் சொல்லி வருகிறார்கள்.

எந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்துகிற விவசாயிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த விவசாயிகளை கூட தற்போது நிலைகுலைய செய்து விட்டது அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். உற்பத்தி செய்கிற பொருட்களுக்கு விலை இல்லை, பயிர் செய்த பணம் கூட கிடைக்கவில்லை, என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி வண்டி, வண்டியாக தண்ணீரில் கொட்டப்பட்ட காட்சியும், செய்தியும் விவசாயிகளுக்கு பெரிய பயத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவே கோடை தக்காளி பயிர் செய்வதிலிருந்து விவசாயிகள் விலகினார்கள். அரசும் தோட்டக்கலைத் துறையும் இதை கண்காணிக்க வேண்டும் இதுதான் அவர்களுடைய வேலை.
ஆனால் அதை விட்டுவிட்டு வேறு எங்கோ கவனத்தை செலுத்தி இருக்கிறார்கள் என்பது தக்காளி விலை உயர்வில் தெரிகிறது.
இப்போது ரூபாய் 19 கோடி செலவில் தக்காளி பயிர் செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது தோட்டக்கலை துறை.

ஏன் இந்த எண்ணம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அவர்களுக்கு ஏற்படவில்லை. அரசின் அலட்சியப் போக்கு இது என்பதை வெளிப்படையாகவே காட்டுகிறது. பருவ கால பயிர்கள் குறைந்து போகும் போது அந்த இடைவெளியை நிரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது தோட்டக்கலைத்துறை என்றால்? எந்த திட்டமும்
இல்லை என்பதை இந்த தக்காளி விலை உயர்வு காட்டுகிறது. அரசு ஒரு பக்கம் கவனம் செலுத்தாமல் போனாலும் அரசியல் கட்சிகள் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளுவது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது சாமானிய மக்களுக்கு.

தக்காளி விலை உயர்வு பற்றி பாஜக தேசிய தலைவர் எச் ராஜா சொன்ன விளக்கம் இன்னமும் அவருடைய அரசியல் முதிர்ச்சி இல்லாமையை காட்டுகிறது. தக்காளி அதிக விலை விற்றால் ஒரு வாரத்திற்கு தக்காளி வாங்காமல் இருங்கள். இதுதான் எச். ராஜா சொன்ன தீர்வு. தங்கம் அதிக விலைக்கு விற்கிறது என்பதற்காக
இரண்டு மூன்று மாதங்களுக்கு தங்கம் வாங்காமல் இருந்து விடலாமா? அப்படியானால் அரசாங்கம் எப்படி இயங்கும்.

இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் எச்.ராஜா போன்ற தலைவர்கள் இப்படி பேசுவது அவர்களின் அரசியல் முதிற்ச்சியின்மையை காட்டுகிறது. அரசாங்கம் இப்படி உணவு பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு நல்ல அரசுக்கு எடுத்துக்காட்டு அல்ல. அதை சுட்டிக் காட்ட வேண்டிய
நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களும் சுட்டிக் காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களின் பங்காளி சண்டையின் உள்ளே மூழ்கி இருப்பது ஆரோக்கியமான அரசியலாக இருக்காது.

ஜோதி நரசிம்மன்

ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here