இந்திய பொருளாதார வளர்ச்சியிலும், விலைவாசியிலும் முக்கிய பங்கு வகிக்கும் பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக ஓரே விலையில் இருப்பது மட்டும் அல்லாமல் லிட்டர் 100 ரூபாய்க்கு
அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த எண்ணெய் வள துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 88 டாலருக்கும் அதற்கு கீழ் வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் இந்தியா இறக்குமதி செய்து வந்த கச்சா எண்ணெய்யின் சராசரி ஒரு பேரல் விலை 83.76 டாலர், இதேபோல் மே மாதம் 74.93 டாலர், ஜூலை மாதம் 78.34 டாலர். ஆனாலும் மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர்.
அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனங்கள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஆப்ரேட்டிங் லாபத்தை பெற உள்ளது,
கடந்த ஆண்டு 60000 கோடி ரூபாயாக இருந்தது. இது மட்டுமா இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சுத்திகரிப்பு பொருட்கள் மூலம்
கூடுதலாக சில விற்பனை பொருட்களை பெற்றுகிறது, இதை refining margin என அழைக்கப்படுகிறது.
இது அனைத்தும் மத்திய அரசு நீண்ட காலமாக பெட்ரோல் விலையை தொடர்ந்து 100 ரூபாய்க்கு அதிகமாக வைக்கப்பட்ட காரணத்தால் நடந்தது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் வள துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க முக்கியமான
காரணம் முன்னாள் காங்கிரஸ் அரசு 1.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பத்திர கடன் பெரும் சுமையாக இருக்கும் காரணத்தால் விலையை குறைக்க முடியவில்லை என கூறுகின்றனர்.
இதேவேளையில் ஆர்பிஐ, மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உபரி நிதியை கிட்டதட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது, கடந்த வருடம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட தொகை 30,307 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 87,416 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் மோடி தலைமையிலான அரசு கடந்த 9 வருடத்தில் ரூ.100 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்திய கடந்த 67 ஆண்டுகளில் 14 பிரதமர்களை கண்டுள்ளது, இந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த கடன் அளவு 55 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் அளவு 155 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் குற்றம்சாட்டியுள்ளது.
2024 மார்ச் 31ல் இதன் அளவு 169,46,666.85 கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 1.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பத்திர கடன்களை எப்படி காரணம் கூற முடியும்..? மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை பல முறை திருத்தியுள்எளது, இதேவேளையில்
நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது BJP அரசுக்கு பெரிய அளவில் சாதகமாக அமைந்தது, ஆனாலும் இது பொருளாதார வளர்ச்சியில் எதிரொலிக்கவில்லை. மேலும் மார்ச் 2021ல் முன்னாள் எண்ணெய் வள துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரீடைல் விற்பனையில் வசூலிக்கப்படும் வரி வருமானம் ஏழு ஆண்டுகளில் 459% உயர்ந்துள்ளது என்று நாடாளுமன்பத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 79.65 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 83.72 டாலராகவும், இந்தியா பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 84.19 டாலராகவும் உள்ளது. மேலும் இந்தியாவின் நிதிபற்றாக்குறை அளவீட்டை சமாளிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இப்போதைக்கு குறைக்க வாய்ப்பில்லை.