கடந்த காலங்களில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இஸ்ரோவின் வெற்றிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் இதை தமிழர்களுக்கான வெற்றியாக நம்மால் சுருக்கிவிட முடியாது. இவர்கள் ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றிக்கும், மனித குலத்தின் வெற்றிக்கும் பங்களித்துள்ளனர். அப்படி இருக்கையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை வர்ணனை செய்வதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த வளர்மதி தான் சிறந்து விளங்கினார்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக வளர்மதி பணியாற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஜூலை 30ஆம் தேதி PSLV C56 ராக்கெட் ஏவப்பட்டதை வளர்மதி அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உலகம் எதிர்பார்த்து காத்திருந்த அறிவியல் உலகத்தில் அறிவிப்பாளராக இருந்த வளர்மதி தன் குரலை மௌனமாக்கிக் கொண்டார்.