சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த இரும்பு கம்பிகள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். சென்னை அசோக் நகர் 11-வது அவென்யூவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராகவன் (76) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் வசித்து வரும் வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக இரும்பு கம்பிகள், பித்தளை பொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி வீட்டின் மூன்றாவது தளத்தில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி அந்த பொருட்கள் திருடுபோயுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை தொடங்கிய போலீசார் முதற்கட்டமாக அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.