டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவாய் உத்தரவில் கூறிய சில கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலைக் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதற்காக ராகுல் காந்தி நாடு முழுக்க பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார். அதில் அவரது ஒரு பேச்சு தான் அவரை இப்போது வரை பாடாய் படுத்தி வருகிறது. அப்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “மோடி” எனப் பெயர் வைத்துள்ள அனைவருமே ஒரு போல இருப்பதாகக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.
வழக்கு:
இது ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லி குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் குஜராத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ராகுல் காந்தியைக் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது. இதன் மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்தார். தண்டை காலம் முடிந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு சூழல் உருவானது. இந்த வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டைக் குஜராத் ஐகோர்ட் டிஸ்மிஸ் செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா, சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு முன்பு
கருத்துகள்:
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டையை நிறுத்தி வைத்தனர். இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாகியுள்ளார். இதில் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து இது மாறும் என்ற போதிலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நீதிபதி கவாய் இந்தத் தீர்ப்பில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்குப் பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் பேச்சுகளே நினைவில் இருப்பதில்லை என்று நீதிபதி கவாய் குறிப்பிட்டார். நீங்கள் அதிகபட்ச தண்டனையை விதிக்கும்போது, அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இது குறித்து விசாரணை நீதிமன்றம் எந்தவொரு காரணத்தையும் சாட்டிக் காட்டவில்லை. ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தொகுதி ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
காரணங்கள் சொல்லவில்லை:
நீங்கள் ஒரு தனிநபரின் உரிமையை மட்டுமல்ல, முழுத் தொகுதியின் உரிமையையும் பாதிக்கிறீர்கள். அந்த “கற்றறிந்த” தனி நீதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே சலுகை வழங்க முடியாது என்கிறார். அதேநேரம் இந்த தண்டனைக்கான மற்ற காரணங்கள் குறித்து அவர் எதையும் சொல்லவில்லை என்றும் நீதிபதி கவாய் தெரிவித்தார் 125 பக்கங்களுக்குத் தீர்ப்பை எழுதியுள்ள அந்த கற்றறிந்த தனி நீதிபதி, பல இடங்களில் அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கூறுகிறார்.
ஆனால், தண்டைக்கான காரணத்தை விளக்கவில்லை. குஜராத்தில் இருந்து வரும் சில தீர்ப்புகள் படிக்கவே சுவாரசியமாக இருக்கிறது என்றும் நீதிபதி கவாய் தெரிவித்தார்.