‘இயற்கை வளங்களை அநியாயமாக கொள்ளையடிப்பதால், நீர்மட்டம் குறைகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது ஆற்றுப் படுகைகளில் அளவுக்கு அதிகமாக மணலைச் சுரண்டுவது,
தாயின் மடியை அறுத்து பால் குடிப்பதற்கு சமமானது’ என்றெல்லாம், பல ஆண்டுகளாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்லிவந்தாலும், மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவே இல்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பதெல்லாம் அரசுக்கே தெரிந்தாலும், எந்த அரசும் இதை கண்டுகொள்ளவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவே இல்லை. மாறாக குறிப்பிட்ட ஒரு நபருக்கே லிஃப்டிங் கான்ட்ராக்டை இரு அரசுகளும் கொடுக்கும் வண்ணமே வைத்திருந்தார்கள். அது போல கும்மிடிபூண்டியிலும் கொள்ளைகள் நடந்தேறுகிறது.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே புது கும்மிடிப்பூண்டி ஏரியில் அரசு நிர்ணயித்த அளவை மீறி மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு. திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி ஏரியில் அரசு அனுமதி பெற்று சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த கோரையில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனத்தின் மூலம் 1000க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது
இந்த புது கும்மிடிப்பூண்டி ஏரியின் நீர் பாசன வசதியை எதிர்நோக் கிதான் கும்மிடிப்பூண்டி, பண்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவு ஆழத்திற்கு மண் அள்ளுவதாகவும், நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருவதால் தாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
குவாரியில் மணல் எடுப்பவர்கள் மூன்றடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற விதிக்குப் புறம்பாக நிலத்தடி நீரே சுரக்கும் வரை சுமார் சுமார் 10 அடி வரை ஆழம் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிகின்றனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர் மீது துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும், அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.