என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம் கையப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியிருக்கிறது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கை வலியறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி போராட்டம்:
இதையடுத்து, கடந்த வாரம் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 30க்கும் மேற்பட்ட ராட்ச இயந்திரங்களைக்கொண்டு ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணியை தொடங்கியது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
வன்முறையில் முடிந்த போராட்டம்:
விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாமக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பின் அனைவரும் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலம் என் நிலம்:
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த நிலம் என் நிலம்… இவர்கள் என் மக்கள்…’ என்எல்சி நிறுவனத்தால் எவை எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதெல்லாம் இதை ஒரு செய்தியாக பார்த்துவிட்டு கடந்து செல்பவர்களுக்கு தெரியாது. தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் 68 ஆண்டுகளாக மின்சாரம் தந்து இன்று கதறிக்கொண்டிருக்கின்ற என் மக்கள் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான நிலத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
கதறல் கேட்கவில்லையா:
உண்மையிலேயே எங்கள் கதறல் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? எதற்காக போராடுகிறோம் என்பது இன்னும் விளங்கவில்லையா? இது பாமக சிக்கலோ வன்னியர் சமுதாய சிக்கலோ அல்ல. ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதார சிக்கல். ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காக போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே நியாயம்தானா?
புலம்பியே செத்துபோகும்:
கல்வி கற்று எத்தனை பட்டங்கள் பெற்றாலும், அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத போராடத் தெரியாத சமூகம் இறுதிவரை அரசியல் கள்ளர்களின் காலடியில் அடிமைகளாகவே கிடந்து வாக்குகளை மட்டும் செலுத்திவிட்டு புலம்பியே செத்துபோகும் என்று தங்கர் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.