அங்காடித் தெரு நடிகை மரணம்.! உதவும் குணமுள்ள நடிகைக்கு நடந்த சோகம் .

0
140
அங்காடித் தெரு நடிகை மரணம்.! உதவும் குணமுள்ள நடிகைக்கு நடந்த சோகம் .

சென்னை: அங்காடித் தெரு சிந்து மார்பக புற்றுநோய் தீவிரமடைந்ததால் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது குறித்து அவருடைய மகள் கண்ணீர் மல்க விளக்கியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்தவர் சிந்து. இவருக்கு 14 வயதில் திருமணம் நடைபெற்றது.

15 வயதில் மகள் பிறந்தார். இவருடைய திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது. குடித்துவிட்டு கணவனின் அடி உதை தாங்க முடியாமல் தாய் வீட்டுக்கே வந்தார் சிந்து. வீட்டு வேலை, கடையில் சேல்ஸ் கேர்ள் வேலை என கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இதையடுத்து தனது மகளை வளர்த்து ஆளாக்க தான் குழந்தை நட்சத்திரமாக நடித்த துறையை சிந்து தேர்வு செய்தார். அதன்படி முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

பின்னர் அவருக்கு அங்காடித் தெரு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுத்தது. அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். பின்னர் சீரியல்களிலும் நடித்து வந்தார். தனக்கு கிடைக்கும் பணத்தில் யாருக்கேனும் உதவும் குணத்தை கொண்டவர் சிந்து என அவருக்கு நெருக்கமானவர்கள் நினைவு கூருகின்றனர்.

கொரோனா கால கட்டத்தில் துணை நடிகர், நடிகைகளை தொடர்பு கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு தேவையான உணவு பொருள்களை கொடுத்து அனுப்பினார். இவரது சொந்த பணம் செலவழிப்பது இல்லாமல் ஷகிலா, காதல் சுகுமார் உள்ளிட்டோரிடம் உதவி கேட்டு நலிவடைந்த துணை நடிகர்களுக்கு உதவி வந்தார்.

சிந்துவின் மரணத்திற்கு காரணமாக இருந்த மார்பக புற்றுநோயும் கொரோனா காலத்தில் தான் வந்ததாம். அப்போது மருத்துவமனைகளில் கடும் கட்டுப்பாடுகள் இருந்த நேரத்தில் மார்பகத்தில் வீக்கம் இருப்பதை கண்டு மருத்துவமனையில் சோதித்தார். அவர்கள் நீர்க் கட்டி என கூறி அனுப்பிவிட்டார்களாம்.

பிறகு அவர் உடல்நிலை மோசமான சூழ்நிலையில் தான் அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டு பின்னர் பயாப்சி செய்யப்பட்டு அது கேன்சர் கட்டி என தெரியவந்தது.


கொரோனா காலத்தில் பிறரின் நலனை கவனித்தாரே தவிர தன் உடலை சிந்து கவனித்துக் கொள்ளவே இல்லை என்கிறார்கள். நாட்டு மருத்துவம், சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் என சிந்து பார்க்காத மருத்துவமே இல்லையாம். திடீரென தனது மகளின் கணவர் இறந்துவிடவே வெளியூரில் மேற்கொண்டு வந்த தனது நாட்டு மருத்துவ சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னை வந்தார் சிந்து. அவர் தன்னால் இயன்ற வரை திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்தார்.

ஆனால் நோய் தீவிரமடைந்ததை அடுத்து அவரது மார்பகம் அகற்றப்பட்டது. அது ஆறாமல் அப்படியே செப்டிக் ஆனதாகவும் சிந்து பேட்டிகளில் தெரிவித்திருந்தார். மேலும் தனது மருத்துவச்
செலவுகளுக்கு உதவுங்கள் என அனைவரிடமும் மன்றாடி கேட்டார்.

ஆனாலும் நடிகை ஷகிலா, உள்ளிட்டோரே உதவினர். இதில் தனது மகளுக்கும் பேத்திக்கும் பராமரிக்க செலவு போக தனது மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக ஒரு கை செயலிழந்து உடல் குண்டாகி முகமெல்லாம் வீங்கிய நிலையில் அத்தனை வலிகளை அனுபவித்தார். தனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என்றும் கூட ஒரு கட்டத்தில் கேட்டார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் அதிகாலை 2.40 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 41 வயதான சிந்து தனது மகளுக்காகவே வாழ்ந்தார். அவருக்காகவே இறுதி மூச்சு வரை கஷ்டப்பட்டார்.

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவரது கிட்னி செயலிழந்தது. இதையடுத்து அவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அம்மா இல்லாமல் இனி நான் என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை என சிந்துவின் மகள் உருக்கமாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here