ஊட்டச்சத்து குறித்த தரவுகள் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அவ்வப்போது நடத்தப்படும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இதன் சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பழங்குடியின குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
போஷான் அபியான், அங்கன்வாடி சேவைகள், வளரிளம் பெண்களுக்கான திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா (பி.எம்.எம்.வி.ஒய்) போன்ற பல திட்டங்கள் பழங்குடியினர் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
2018 மார்ச் 8 ஆம் தேதி தொடங்கப்பட்ட போஷன் அபியான், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
போஷன்மா மற்றும் போஷன் பக்வாடா ஆகியவை முறையே செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன.
அண்மையில் நடைபெற்ற போஷான்பக்வாடா 2023-ல், பழங்குடியின மக்களை மையமாகக் கொண்டு செயல் திட்டங்கள் நடத்தப்பட்டன. பழங்குடியினர் அதிகமுள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான ரத்த சோகை முகாம்கள், ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் ரத்த சோகை முகாம், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், போன்றவை நடத்தப்படுகின்றன.
இத்தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.