பட்டாசு விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம்.!

0
92
மணிப்பூர் வன்முறை

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.


கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவிலுக்குப் போகும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த பட்டாசு குடோனில் பலரும் வேலை செய்து வந்துள்ளனர்.
இங்கே நேற்று காலை எதிர்பாராத வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இதில் படுகாயமடைந்த 9 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து:

இந்த விபத்தில் பட்டாசு குடோன் மட்டுமின்றி, அருகில் இருந்த ஹோட்டல், 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழ்நாட்டில் சமீப காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெடி விபத்தாக இது பார்க்கப்படுகிறது. விபத்து நடந்தவுடன் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அங்கே விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு மத்தியில் தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.


கிருஷ்ணகிரியில் கேஸ் சிலிண்டர் வெடித்து எப்படி விபத்து ஏற்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, கிருஷ்ணகிரியில் சிலிண்டர் வெடித்ததால் பட்டாசு விபத்து இல்லை என்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தானாக வெடிக்காது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து விபத்து ஏற்படவில்லை. எரிபொருள் நிறுவனங்கள் எந்தவொரு நிறுவனமும் அந்த குறிப்பிட்ட பகுதியில் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சரே அருகில் இருந்த அருகில் இருந்த பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இங்கே கேள்வி என்னவென்றால் குடியிருப்பு பகுதியில் பட்டாசு
தொழிற்சாலைக்கு எதற்காக அனுமதி தரப்பட்டது. மேலும், குடியிருப்பு பகுதியில் பட்டாசு தொழிற்சாலைக்கு ஏன் அனுமதி தரப்பட்டது என்பது குறித்தும் இதுபோன்ற சம்பவங்கள்
நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றும் தமிழக அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, இது கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து இல்லை. விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2லட்சம் மற்றும்
படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரமதர் மோடி அறிவித்திருந்தார். அதேபோல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு
ரூ.1 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here