கேண்டீனுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்காக ஒப்பந்ததாரர் மாரிமுத்து என்பவரிடம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள், மருத்துவ மாணவ -மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் என தினமும் ஆயிரக்கணக்கனோர் வருகை தருவது வழக்கம். இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கேண்டின்கள் உள்ளன. இந்த கேண்டீன்களை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் அங்குள்ள கேண்டீனுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாரிமுத்து என்ற ஒப்பந்தராரிடம் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூ.20 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புகாருக்கு உள்ளான தேனி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். புகாருக்கு உள்ளாகி சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ள மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.