சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் ஆஜராக வந்த மூன்று குற்றவாளிகளைச் சரமாரியாகத் தாக்கிய வழக்கறிஞர்களால் , விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது .
மேலும் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் , வழக்கறிஞர்களைத் தடுத்து நிறுத்தி , 3 குற்றவாளிகளையும் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர் .
சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33). இவர் தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் . இவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தார். ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
ஜெய்கணேஷ், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு, அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.
அதன்பிறகு இரவு வீடு திரும்பினார். ராஜீவ் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டின் அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வழக்குரைஞர் ஜெய்கணேசை சரமாரியாக வெட்டினர்.
இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெய்கணேஷ், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. உயிருக்குப் போராடிய அவரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெய்கணேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் உதவி ஆணையர் ஜீவானந்தம், துரைப்பாக்கம் ஆய்வாளர் செந்தில்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விழுப்புரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் , வக்கீல் ஜெய்கணேஷை கொலை செய்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த முருகன், பிரவீன் மற்றும் ஶ்ரீதர் ஆகிய மூன்று பேர் நீதிபதி ராதிகா முன்பு சரணடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1 நீதிபதி ராதிகா குற்றவாளிகளை வருகின்ற ஐந்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விழுப்புரம் காவல் துறையினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேடம்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர் .
இந்நிலையில் கொலை குற்றவாளிகள் மூன்று நபர்களையும் விழுப்புரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில்சூழ்ந்து கொண்டு, காவல்துறையினரின் முன்னிலையிலேயே கடுமையாக தாக்கினர் . இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.