நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை மைதானத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தேசியக் கொடியை ஏற்றினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் உடன் இருந்தார்.
தேசியக் கொடியை ஏற்றி முடித்த பின்னர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் காவல்துறை வாகனத்தில் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை , சாரணியர்,செஞ்சிலுவை சங்க மாணவர்கள் ஆகியோரது மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் 20 பயனாளிகளுக்கு ₹ 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
அதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரத்தில் இயங்கி வரும் விஆர் பி மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியினை ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.