சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பரேசன் என்ஜினீயர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஏன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”சந்திரயான்-3 திட்ட வெற்றி: விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகிறார், பிரதமர் மோடி. சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

லேண்டர் தரையிறங்கியவுடன், நீங்கள் அவசரமாக திரையில் தோன்றினீர்கள். அந்த பெருமையை தட்டிச் சென்றீர்கள். ஆனால், உங்கள் அரசு இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆதரவாக இருக்க மறுப்பது ஏன்?
சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பரேசன் என்ஜினீயர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஏன்? இதுபோன்ற முக்கியமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 32 சதவீதம் குறைத்தது ஏன்?
உலகத்தரம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை அவர்கள் நடத்தி வந்த போதிலும், அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை நீங்கள் மதிக்கவில்லை.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், விஞ்ஞானிகளின் சாதனையில் நீங்கள் புகழ் தேடுகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.