சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதல்ல என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். சம்பிரதாயத்துக்காக அமைச்சராக நீடிக்கும் அவரால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. எந்த பொறுப்பும் வழங்காமல் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்க அனுமதித்து இருப்பது அரசியல் சட்டத்துக்கும், தார்மீக அடிப்படையிலும் தவறானது.
அது மட்டுமல்ல இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது. நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்துக்கு உகந்தது அல்ல என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். ஆனாலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது:- ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் நகல் ஆன்லைனில் வந்துவிட்டாலும், அதன் நகல் முறைப்படி அரசுக்கு நாளை கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு ஐகோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி இருந்தார். இப்போது ஐகோர்ட்டு நீதிபதிகளும் தீர்ப்பு கூறி விட்டனர். எனவே இதையும் மீறி செந்தில்பாலாஜியை அமைச்சராக நீடிக்க முதலமைச்சர் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது. எனவே ஐகோர்ட்டு தீர்ப்பின் நகல் முதலமைச்சருக்கு சென்றடைந்ததும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.