மறுபடியும் இந்தி திணிப்பா.? எம்.பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு.!

0
100
அமித் ஷா

இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த கருத்துக்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு என தேசிய மொழி என எதுவும் இல்லை என்றாலும் கூட அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என திமுக, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

சு.வெங்கடேசன்

ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாடுகளில் பேசும்போதெல்லாம் தமிழில் உள்ள சில பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி தமிழில் பேசியது விவேகானந்தரின் உரையுடன் ஒப்பிடப்பட்டது. அதாவது, “அன்புமிக்க, சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ்மொழி, அதன் பாரம்பரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாரதி மண்ணின் மக்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். சமஸ்கிருதத்தை விட, தமிழுக்கு தொன்மை உள்ளது. அதை அனைவரும் கற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதே ஆண்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, குறிஞ்சி மலர் குறித்து தமிழில் பேசியிருந்தார்.
இதற்கெல்லாம் டாப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என தமிழில் பேசியிருந்தார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பேசுபொருளானது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இதைத்தொடர்ந்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின உரை, அக்டோபர் மாதம் 10ம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா தொடங்கி சமீபத்தில் பப்புவா நியூ கினி நாட்டின் தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டது வரை தமிழ் குறித்த அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்தன. தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் பாஜக அரசு கொடுக்கவில்லை என்று விமர்சித்து வந்த திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரதமரின் செயல்பாடுகள் பதிலடி கொடுப்பதை போல இருந்தது. இதனால் மொழி சம்பந்தமாக எந்த சலசலப்பும் பெரியதாக மேலெழவில்லை. இந்நிலையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்கள் மொழி தொடர்பான சலசலப்பை கடுமையாக எழுப்பியிருக்கிறது. இந்த கூட்டத்தில் தலைமையேற்று பேசிய அவர், “அனைத்து இந்தியா மொழிகளையும் அங்கீகரிப்பதன் மூலம்தான் தேசம் அதிகாரம் பெரும். நமது நாட்டின் பாரம்பரியங்கள் பேணி காக்கப்பட வேண்டும்.

சு.வெங்கடேசன்

அதேபோல காலனித்துவத்தின் அடையாளங்கள் துடைத்தெறியப்பட வேண்டும். இது சாத்தியமாக வேண்டும் எனில் இந்திய மொழிகள் தங்கள் வலிமையை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளும் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றியது கிடையாது. அமைச்சர்களும் இந்திய மொழிகளில் பேசத் தொடங்கியுள்ளனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது” என்று கூறியிருந்தார். இறுதியாக “இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்த கருத்துதான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஹிந்தியை ஏற்றுக் கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார்.
இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது. இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here